இணைய வாசலில் சந்திக்கின்றோம்
Welcome Message by Principal Master Teacher
பெருமதிப்பிற்குரிய தமிழாசிரியர்களே,
வணக்கம். மாணவர்கள் நம்மிடமிருந்து பெறும் கல்வி அர்த்தமிக்கதாகவும் தம் வாழ்நாளுக்குப் பயன்தரக்கூடியதாகவும் அமையப்பெற்றிருப்பது கட்டாயமாகும். பாடத்திட்டத்தை நன்கு அறிந்து புரிந்துகொண்டிருப்பதோடு ஆசிரியர் தாம் கற்பிக்கும் பாடப்பொருள் பற்றிய அறிவினை அகலமாகவும் ஆழமாகவும் விரிவுப்படுத்திக்கொள்வதிலும் கற்பித்தலியலில் புதுப்புது முறைகளை ஆய்வதிலும் முற்படவேண்டியது அவசியமாகிறது. சிங்கப்ர் ஆசிரியர் கலைக்கழகம், கற்க – கற்பிக்க என்னும் அடிப்படையில்தான் இன்று பல நிலைகளிலும் பல வகைகளிலும் ஆசிரியர்க்கான பணிமேம்பாட்டுப் பயில்திட்டங்களை வடிவமைத்து நடத்திக்கொண்டு வருகிறது.
சித்திரமும் செந்நாப் பழக்கமும் பயிற்சியால் விளைபவை என்பதை நாம் அறிவோம். பணிமேம்பாடு என்பது தொடர் அனுபவம். அது ஒவ்வொரு நாளும் நிகழக்கூடியதொன்று. 21ஆம் நூற்றாண்டுக் கல்வி வாழ்க்கையில் குடிபுகுந்திருக்கும் மாணவர்களும் ஆசிரியர்களும் பல்வேறு துறையைச்சார்ந்த அறிவினைப் பெற்றுவருகின்றோம். கற்பவரின் நுண்ணறிவு, முந்தைய அனுபவங்கள் ஆகியவற்றைப் பொறுத்துத்தான் கற்றல் கற்பித்தல் முறைகளும் அணுகுமுறைகளும் அமைகின்றன. பன்னாட்டுக் கல்வியாளர்கள் கற்றல் கற்பித்தலைப் பற்றி ஆய்வுகள் பல மேற்கொண்டு வருவதை நாம் அறிவோம். ஆய்வு செய்யப்பட்ட கட்டுரைகளையும் செய்திகளையும் ஆசிரியர் அறிந்திருப்பது இன்றைய காலத்தின் தேவை. அப்போதுதான் நாம் நமது பாடப்பொருளறிவையும் பயன்மிகு கற்பித்தலியலையும் அவ்வப்போது புதுப்பித்துக்கொள்ள முடியும். அதற்கான பல்வேறு வடிவங்களில் பயிற்சிகளையும் தகவல்களையும் கல்வி அமைச்சின் சிங்கப்பூர் ஆசிரியர் கல்விக்கழகத் தமிழாசிரியர் பணிமேம்பாட்டகம் வழங்கிவருகின்றது.
ஆசிரியர் மேலும் பயிற்சி பெறுவதற்கான மற்றொரு கற்றல் தளத்தை வழங்கவேண்டும் என்னும் நோக்கில்தான் இந்த இணையவாசல் திறக்கப்பட்டுள்ளது. இதில் தமிழாசிரியர்க்கான பயிற்சித்திட்டங்கள், கற்பித்தல்சார்ந்த வளங்கள், சிங்கப்பூர்க் கற்பித்தல் கொள்கைகளும் முறைமைகளும் பற்றிய செய்திகள் முதலானவை இடம்பெற்றுள்ளன. இவ்வளங்களையும் பணிமேம்மாட்டுத் தொடர்பான செய்திகளையும் அவ்வப்போது புதுப்பித்துக்கொண்டு வருவோம். தமிழாசிரியர்கள் இவ்விணையத்தளத்தைப் பயன்படுத்திப் பயன்பெறுவீர்கள் என நம்புகிறோம். இவ்விணையவாசல் மேம்பாடு குறித்து உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். உங்களின் கற்பித்தல் பணி மேலும் சிறந்தோங்க முதன்மை ஆசிரியர்கள் சார்பிலும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். நன்றி.
இப்படிக்கு,
முனைவர் எஸ் பி ஜெயராஜதாஸ் பாண்டியன்
தலைமை முதன்மை ஆசிரியர்
தமிழாசிரியர் பணித்திறன் மேம்பாட்டகம்
சிங்கப்பூர் ஆசிரியர் கலைக் கழகம், கல்வி அமைச்சு